ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

லக்கினாதிபதி திசை நன்மையையே செய்யும் என்றனர், கடுமையான இன்னல்களை தர காரணம் என்ன ? எனது ஜாதகம் யோக ஜாதகமா?


கேள்வி :

எந்த லக்கனம் என்றாலும், அந்த லக்கினத்திற்கு அதிபதியான கிரகத்தின் திசை நன்மையையே தரும் என்றும், யோக அதிபதிகளின் திசையும் ஜாதகருக்கு பரிபூர்ண யோகங்களை நல்கும் என்றும் கூறுகின்றனர், ஆனால் கடந்த சனி திசை ( லக்கினாதிபதி ) எனக்கு மிகப்பெரிய இன்னல்களையும் மீள முடியா துயரங்களையுமே பலனாக தந்தது, சனி திசையில் நான்பட்ட கஷ்டத்திற்கு ஓர் அளவில்லை எனலாம், இது எதனால், தற்போழுது நடைபெறும் புதன் திசையாவது எனக்கு நன்மைகளை தருமா ? 6,9க்கு உடையவன் இன்னல்களை தரக்கூடும் என்கின்றனர், எனது ஜாதகம் யோக ஜாதகமா?

பதில் :

ஒருவரது ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமையை அறியாமலும், நவகிரகங்களின் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவகங்கள் ஜாதகருக்கு தரும் நன்மை தீமையை பற்றி அறியாமலும், பொது கருத்தாக , சுப கிரகங்களின் திசாபுத்தி நன்மையையும், அசுப கிரகங்களின் திசாபுத்தி இன்னல்களையும் தரும்  என்று பலன் கூறுவதும், ஜாதக கணிதம் அறியாமல் கூறும் தவறான அணுகுமுறையாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, மேலும் காலபுருஷ தத்துவத்திற்கு நவகிரகங்கள் பெரும் ஆட்சி,உச்சம்,நட்பு, சமம்,பகை,நீச்சம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு
ஆட்சி,உச்சம்,நட்பு, சமம் நிலையில் இருக்கும் கிரகம் மற்றும் கிரகத்தின் திசை யோகங்களை தரும் என்றும், பகை,நீச்சம் நிலையில் இருக்கும் கிரகம் மற்றும் கிரகத்தின் திசை அவயோகங்களை தரும் என்று பலன் கூறுவதும், ஜாதக கணிதம் அறியாமல் நவகிரகங்கள் தனது திசாபுத்தியில் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை மற்றும் யோகம் அவயோகம் பற்றிய புரிதல் இல்லாமலும் கூறும் பொது பலனாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது.

ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை பற்றி ஓர் தெளிவு இல்லை எனில் நிச்சயம் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சரியான பலாபலன்கள் கூற இயலாது, மேலும் நடந்த,நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமையை பற்றிய புரிதல் இல்லாத பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தனது கற்பனை மூலம் " ஜாதக பலன்களை " வாய் ஜாலம் மூலம் நிகழ்த்த இயலுமோ அன்றி, கூறும் பலாபலன்கள் ஜாதக வலிமையின் அடிப்படையிலானதாக அமைய சிறிதும் வாய்ப்பு இல்லை, இதை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது வாழ்க்கையின் முன்னேற்றங்களுக்கு உண்டான திட்டமிடுதல்களை நடைமுறை படுத்துவது, சம்பந்தபட்ட ஜாதகருக்கு மிகப்பெரிய சவால்களை வாரி வழங்கும், என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையிலேயே ஜாதகர் இயங்குகிறார், பாவக வலிமை தரும் யோக அவயோகங்களையே நவ கிரகங்களின் திசாபுத்தி காலத்தில் ஜாதகர் அனுபவிக்கின்றார், என்பதை கீழ்கண்ட அன்பரின் ஜாதகத்தின் மூலம் சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு, தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : விசாகம் 1ம் பாதம்

லக்கினாதிபதி திசை நன்மையையே செய்யும் என்றனர், கடுமையான இன்னல்களை தர காரணம் என்ன ?

 நவகிரகங்கள் சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையையே தனது திசாபுத்திகளில் காலங்களில் ஏற்று நடத்துகிறது, தனிப்பட்ட முறையிலான யோக அவயோகங்களை தர நவ கிரகங்களுக்கு வலிமை இல்லை என்பதை அடிப்படையில் புரிந்துகொள்வது நல்லது, மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினாதிபதியின் திசையான சனிதிசை, லக்கினாதிபதி என்பதால் ஜாதகருக்கு யோகங்களை தருவார் என்று ஜாதக பலனாக கூறப்பட்டு இருக்கின்றது, ஆனால் லக்கினாதிபதியான சனி திசை ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,7,8,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தனது திசை முழுவதும், பாதக ஸ்தானத்தால் 200% விகிதம் பாதிக்கப்பட்ட 1,7,8,10ம் வீடுகளின் பலனை ஏற்று நடத்தியிருக்கிறது, இதனால் ஜாதகர் சனி திசை முழுவதும் பாதக ஸ்தானம் தரும் கடுமையான இன்னல்களின் பிடியில் மாட்டிக்கொண்டு இன்னலுறும் சூழ்நிலையை தந்து இருக்கின்றது, லக்கினவழியில் இருந்து ஜாதகர் நல்ல வளரும் சூழ்நிலையில் இல்லாமல் தவிக்கும் தன்மையையும், உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த இன்னல்களில் துன்புறும் தன்மையையும், லக்கினாதிபதி திசை தந்து இருக்கின்றது, மேலும் ஜாதகரின் வளர்ச்சி சீரிய முறையில் இல்லாமல் பல தடைகளையும் தாமதங்களையும் சந்தித்து இருக்கின்றார், அடிப்படையில் கல்வி, உடல்நலம், வருமானம், தொழில், திருமணம் ஆகிய வழிகளில் ஜாதகர் அதிக இன்னல்களை சந்தித்து இருக்கின்றார்.

7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள் சேர்க்கை இன்மை, கூட்டு முயற்சி தோல்வி, சமூகத்தில் போராட்டம், குறுகிய வட்டத்தில் ஜாதகர் இன்னலுறும் தன்மை என்ற வகையிலும், எதிர்பால் அமைப்பினரால் இன்னல்களையும் சந்திக்கும் நிலையை தந்து இருக்கின்றது, 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்புகள், மருத்துவ செலவினங்கள், வீண் தனவிரையம், உடல்நல கேடு, எதிர்பாராத செலவினங்கள், மற்றவர்களை நம்பி செய்யும் காரியங்களின் திடீர் இழப்பு என்ற வகையிலும், 10ம் பாவக வழியில் இருந்து வேலை தொழிலில் முன்னேற்றம் இன்மை, ஜீவன ரீதியான கடுமையான  இன்னல்கள், போராட்டம், தன்னம்பிக்கை பாதிக்கும் விதமான செயல்பாடுகள், தெளிவில்லாத வாழ்க்கை முறை, சுய முன்னேற்றத்தில் அக்கறை இன்மை, தகுதிக்கு உகந்த செயல்களை செய்யாமல், பொழுது போக்கு அம்சங்களில் அதீத ஆர்வம் மற்றும் ஈடுபாடு ஜாதகரின் வாழ்க்கையை கடுமையாக பதித்து இருக்கின்றது, கடந்த லக்கினாதிபதியின் திசையான சனி திசையில்.

எனவே ஜாதகருக்கு நடைபெற்ற திசை லக்கினாதிபதியின் (சனி ) திசை என்றாலும், அவர் ஏற்று நடத்தியது 1,7,8,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக பலன் என்பதனால் ஜாதகர் 1,7,8,10ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை சனி திசையில் அனுபவிக்கும் நிலையை தந்தது, எனவே சுய ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பலன் கூற வேண்டும், அதுவே ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு சிறந்த வழி காட்டுதல்களாக அமையும், மாறாக லக்கினாதிபதி திசை, யோகாதிபதி திசை, ராசியாதிபதி திசை, சுப கிரகத்தின் திசை என்பதால் நன்மையை செய்யும் என்று கூறுவது முற்றிலும் பாவக வலிமையை பற்றிய தெளிவு இல்லாமல் கூறும் வார்த்தைகளாகவே அமையும், தங்களுக்கு கடந்த சனி திசை ( லக்கினாதிபதி திசை என்ற போதிலும் ) அவர் ஏற்று நடத்தியது பாதக ஸ்தான பலன் என்பதால் தாங்கள் 1,7,8,10ம் பாவக வழியிலான கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது என்பதே முற்றிலும் உண்மை அன்பரே !

நடைபெறும் புதன் திசை நன்மையை தருமா ?

நிச்சயமாக மிகுந்த யோக பலன்களை வாரி வழங்கும், ஏனெனில் நடைபெறும் புதன் தசை தங்களுக்கு 6,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விபரீத ராஜயோகத்தை வாரி வழங்குகிறது, குறிப்பாக தொழில் ரீதியான வெற்றிகள் மிதமிஞ்சிய அளவில் இந்த புதன் திசை தங்களுக்கு தரும், சொந்த முயற்சியில் வாழ்க்கையில் தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம், சொத்து சுக சேர்க்கை, திடீர் அதிஷ்டம் என புதன் திசை தங்களுக்கு சிறந்த நன்மைகளை 100% விகிதம் தர காத்துகொண்டு இருக்கின்றது, 6,9க்கு அதிபதி என்ற போதிலும் அவர் ஏற்று நடத்துவது வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலன் என்பதால் மிகுந்த யோகமும், நன்மையையும் ஜீவன ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், "வாழ்த்துக்கள்"

எனது ஜாதகம் யோக ஜாதகமா ?

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகளை தாங்கள் உணர்ந்து செயல்படுவது அவசியமாகிறது, அடிப்படையில் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது தங்களுக்கு வரும் சிறப்பான யோகங்களை தாங்களே உதறித்தள்ளும் தள்ளும் சூழ்நிலையை தரும், மேலும் போதிய விழிப்புணர்வு இன்றி வாழ்க்கையில் வரும் நன்மைகளை  தாங்கள் தட்டி கழிக்க கூடும், எனவே முறையான ஜாதக ஆலோசனை தங்களுக்கு சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை அனுபவிக்க வழிவகுக்கும், முறையான பீரிதி பரிகாரங்கள், தங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும், வாரி வழங்கும். முறையான ஜாதக ஆலோசனை தங்களுக்கு அவசியம் தேவை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக