சனி, 27 மே, 2017

சுய ஜாதகத்தில் நமக்கு வரும் நல்ல நேரம், கெட்ட நேரம் பற்றி துல்லியமாக அறிந்துகொள்வது எப்படி ?


 சுய ஜாதகத்தில் நமக்கு வரும் நல்ல நேரம், கெட்ட நேரம் பற்றி துல்லியமாக அறிந்துகொள்வது எப்படி ?

மிக சிறந்த கேள்வி, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை, வலிமை அற்ற நிலை ஆகியவை பற்றி தெளிவு பெறுவதும், நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் தனது சுய ஜாதகத்தில் எந்த எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை பற்றி தெளிவு பெறுவதும், அதற்க்கு கோட்சார கிரகங்கள் தனது கோட்சார நிலையில் இருந்து வழங்கும் பலாபலன்கள் பற்றிய தெளிவும், ஒருவரது சுய ஜாதகத்தில் வரும் நல்ல நேரம் மற்றும் கெட்ட நேரம் பற்றி மிக துல்லியமாக அறிந்துகொள்ள உதவும், சுய ஜாதகத்தில் தற்போழுது எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து யோக பலன்களையும் ( நல்ல நேரம் ), வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து அவயோக பலாபலன்களையும் ( கெட்ட நேரம் ), அனுபவிக்கும் நிலையை தரும்.

எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் முதல்  பனிரெண்டு பாவகங்களின் வலிமையே ஓர் ஜாதகரின் நல்ல நேரம் மற்றும் கெட்ட நேரத்தை நிர்ணயம் செய்கிறது, நடைபெரும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தி ஜாதகருக்கு யோக அவயோக பலாபலன்களை வாரி வழங்குகிறது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம், பொதுவாக சுய ஜாதகத்தில் பாவக கிரகங்களின் திசா புத்திகள் நடைபெறும் பொழுது ஜாதகருக்கு அவயோக பலன்களும், சுப கிரகங்களின் திசா புத்திகள் நடைபெறும் பொழுது ஜாதகருக்கு சுபயோக பலாபலன்களும் நடைமுறைக்கு வரும் என்பது பொது கருத்தும், மேற்கண்ட கருத்தும் என்பது முற்றிலும் ஜோதிட உண்மைக்கு புறம்பானது, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் பலாபலன்களை நவகிரகங்களின் திசா புத்திகள் ஏற்று நடத்துகிறது என்பதே உண்மை, நவகிரகங்கள் ஜாதகருக்கு தனிப்பட்ட பலாபலன்களை வழங்காது என்பதனை கீழ்கண்ட உதாரணம் மூலம் தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மிதுனம் 
ராசி : விருச்சகம் 
நட்ஷத்திரம் : கேட்டை 4ம் பாதம்

ஜாதகருக்கு தற்போழுது ராகு திசை நடைபெறுகிறது, ( 05/03/2009 முதல் 05/03/2027 வரை நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு தரும் பலன் என்ன ? என்பதை சற்று சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! ராகு சுய ஜாதகத்தில் அமர்ந்திருக்கும் இடம் எது ? தான் அமர்ந்த பாவகத்திற்கு ராகு வலிமை சேர்க்கும் விதத்தில் இருக்கின்றாரா ? தனது திசையில் எந்த எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார் என்பதை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

சுய ஜாதகத்தில் ராகு விருச்சிக ராசியில் உள்ள 5ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார், தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை அற்ற நிலையில் காணப்படுகிறார், இருப்பினும் தனது திசாபுத்தி காலங்களில் 2,4ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவிலான சுபயோக பலாபலன்களை வாரி வழங்கி கொண்டு இருப்பது ஜாதகருக்கு மிக சிறந்த நல்ல நேரத்தை தரும் அமைப்பாகும், குறிப்பாக ஜாதகர் ராகு திசை ராகு புத்தியில் நற்பலன்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் யோகத்தை தந்தது, இதற்க்கு காரணமாக ராகு திசை மற்றும் புத்தி வலிமை பெற்ற 2,4ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தந்ததே என்றால்? அது மிகையில்லை.

மேலும் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷத்தில் 5 பாகைகளும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாம் ராசியான ரிஷபத்தில் 25 பாகைகளும் கொண்டதாக அமைந்தது, ஜாதகர் அசையா மண் தத்துவம் சார்ந்த தொழில் மூலம் அபரிவிதமான வருமான வாய்ப்பை ஸ்திரமாக பெற்றார், பொருளாதார ரீதியான வெற்றி ஜாதகருக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது, ராகு சுய ஜாதகத்தில் வலிமை அற்று நின்ற போதிலும், தனது திசாபுத்தியில் வலிமை மிக்க பாவக பலனை ஏற்று நடத்தியது ஜாதகருக்கு சிறப்பான வெற்றிகளையும், தனசேர்க்கையையும் வாரி வழங்கியது.

ராகு திசையில் குரு புத்தி ஜாதகருக்கு வழங்கி பலன் என்ன? என்பதனை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், ஜாதகருக்கு ராகு திசையில் குரு புத்தி ( 16/11/2011 முதல் 11/04/2014 வரை ) நடைபெற்றது, நடைபெற்ற குரு புத்தி ஜாதகருக்கு 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, ஒருவரது சுய ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்லதல்ல, சம்பந்தம் பெற்றாலும் நவகிரகங்கள் தனது திசா புத்திகளில் சம்பந்தம் பெற்ற பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாமல் இருப்பது நல்லது, ஆனால் மேற்கண்ட ஜாதகருக்கு முழு முதற் சுப கிரகமான "குரு" தனது திசையில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தியது ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான இன்னல்களை வாரி வழங்கியது, குறிப்பாக ஜாதகரின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் 8பாகைகளும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசியில் 19பாகைகளும் கொண்டு இருப்பது, ஜாதகருக்கு அறிவு சார்ந்த முயற்சிகளில் தோல்வியையும், தொழில் வழியிலான திடீர் இழப்புகளையும், ஜீவன ரீதியான  ( வியாபாரம் மற்றும் கூட்டு தொழில், ஏற்றுமதி இறக்குமதி ) தொடர் நஷ்டங்களையும் 200% விகிதம் வாரி வழங்கியது, இதனால் ஜாதகர் கடுமையான பொருளாதார சிக்கல்களை சந்திக்கும் நிலை உண்டானது, ஜாதகருக்கு ராகு திசை வலிமை பெற்ற பாவக பலனை தந்த போதிலும், ராகு திசையில் குரு புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தியது ஜாதகருக்கு லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான வழியிலான இன்னல்களை கடுமையாக தந்தது, நடைபெறும் திசா அல்லது புத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்த வில்லை எனில் ஜாதகரின் பாடு, படுதிண்டாட்டம் ஆகிவிடும் என்பதற்கு மேற்கண்ட உதாரணம் சரியாக பொருந்தும்.

ராகு திசையில் ராகு புத்தி யோக பலனையும் ( நல்ல நேரம் ) குரு புத்தி அவயோக பலனையும் ( கெட்ட நேரம் ) தந்தது, அடுத்து வந்த சனி புத்தி ஜாதகருக்கு வழங்கிய பலன்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! ராகு திசையில் சனி புத்தி ( 11/04/2014 முதல் 15/02/2017 வரை ) ஜாதகருக்கு 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று குரு புத்தியில் வழங்கிய இன்னல்களை தொடர்ந்த போதிலும், 3ம் வீடு  வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோகங்களை தந்தது, இதனால் ஜாதகர் பாதக ஸ்தான வழியில் இன்னல்களை சந்தித்த போதிலும் ( கெட்ட நேரம் ) வீரிய ஸ்தான வழியில் இருந்து சிறப்பான யோக பலன்களை ( நல்ல நேரம் ) அனுபவிக்கும் யோகம் உண்டானது , ஜாதகருக்கு சகோதர  வழியிலான நன்மைகள், புதிய முயற்சிகள் மற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியம் உண்டானது, மனதில் தைரியம் அதிகரித்தது, ஜாதகருக்கு  நல்ல தொடர்புகள் மூலம் வியாபர விருத்தி உண்டானது, தரகு, கமிஷன் மற்றும் ஏஜென்சி துறை மூலம் நல்ல பொருளாதார விருத்தியை முழுஅளவில் வாரி வழங்கியது, ஜாதகரின் வீரிய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமைந்தது இறை அருளின் பரிபூர்ண கருணையை முழு அளவில் அனுபவிக்கும் யோகத்தை தந்தது, இதனால் ஜாதகரின் வாழ்க்கையில் பல சுப நிகழ்வுகள் அரங்கேறியது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

ராகு திசையில் தற்பொழுது நடைபெறும் புதன் புத்தி ( 15/02/2017 முதல் 04/09/2019 வரை ) ஜாதகருக்கு 2,4ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவிலான சுபயோக பலாபலன்களையும், 6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 30% விகித இன்னல்களையும் தருவது ஜாதகருக்கு சுபயோக பலாபலன்களையே ( நல்ல நேரம் ) அதிக அளவில் தரும் அமைப்பாகும், எனவே தற்போழுது நடைமுறையில் உள்ள ராகு திசையும், புதன் புத்தியும் 2,4ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவிலான சுபயோக பலாபலன்களை வாரி வழங்குவது ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் நல்ல நேரத்தை கட்டியம் கூறுகிறது.

எனவே ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசையும் சுபயோக பலன்களை தருவதும், ராகு திசையில் புதன் புத்தியும் சுபயோக பலன்களை தருவதும் தற்போழுது நடைபெறும் ஜாதகரின் நல்ல நேரத்தை உறுதிப்படுத்துகிறது.

ராகு திசையில் புதன் புத்திக்கு அடுத்து வரும் கேது புத்தி ஆயுள் பாவக பலனையும் ( கெட்ட நேரம் ), சுக்கிர புத்தி சுக ஸ்தான பலனையும் ( நல்ல நேரம் ) சூரியன் புத்தி ஜீவன ஸ்தான பலனையும் ( நல்ல நேரம் )  சந்திரன் புத்தி வீரிய ஸ்தான பலனையும் ( நல்ல நேரம் )  செவ்வாய் புத்தி விரைய ஸ்தான பலனையும் ( கெட்ட நேரம் ) தருவது ராகு திசையில் மற்ற புத்திகள் தரும் பலாபலன்கள் ஆகும், எனவே ராகு திசை ஜாதகருக்கு பொதுவாக சுபயோக பலன்களை தருவது ( நல்லநேரம் ) என்றே எடுத்துக்கொள்ளலாம்.

குறிப்பு :

சுய ஜாதகம் வலிமை பெற்று இருப்பது ஜாதகரின் நல்ல நேரத்தை உறுதிப்படுத்தும், வலிமை அற்று இருப்பது ஜாதகரின் கெட்ட நேரத்தை உறுதிப்படுத்தும், எனவே ஒருவரது சுய ஜாதகத்தில் பாவக வலிமை நிலையையும், நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமை நிலையையும் தெளிவாக உணர்ந்து நல்ல நேரம் மற்றும் கெட்ட நேரத்தை உணர்ந்து நலம் பெறலாம்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக