வெள்ளி, 17 நவம்பர், 2017

திருமண பொருத்தம் : களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால் ஏற்படும் இன்னல்கள் !

  

 திருமண பொருத்தம் காண்பதில் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொள்ளாமல், நட்ச்சத்திர பொருத்தத்தையோ, செவ்வாய் தோஷம், ராகுகேது தோஷம் போன்றவற்றையோ பொருத்தமாக எடுத்துக்கொண்டு திருமணம் செய்வது என்பது கண்ணை கட்டிக்கொண்டு நீர் இல்லா கிணற்றில் விழுவதற்கு பொருத்தமானதாக கருதலாம், குறிப்பாக வரனோ, வதுவோ தனக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் களத்திர பாவகம் எனும் 7ம் வீடு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்துகொண்டு இல்வாழ்க்கையை அமைத்துக்கொள்வது நல்லது, ஏனெனில் அடிப்படையில் மிகவும் வலிமையுடன் இருக்க வேண்டிய அம்சமே களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம்தான், இதுவே தாம்பத்திய வாழ்க்கையில் பிரிவில்லா தன்மையை தரும், ஒருவரை ஒருவர் நான்குபுரிந்துகொண்டு இல்லற வாழ்க்கையை சிறப்பாக எடுத்துச்செல்ல வழிவகுக்கும், மற்ற பாவகங்கள் பாதிக்கப்பட்டாலும் அதன் வழியிலான தாக்கம் சற்று குறைவாகவே அமையும், ஆனால் களத்திர ஸ்தானம் பாதிக்கப்படுவது, இல்லற வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றிவிடும்.

 தனக்கு வரும் வரனின் ஜாதகத்திலோ, வதுவின் ஜாதகத்திலோ களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பின் கண்ணியமாக அந்த வரணையோ, வதுவையோ தவிர்த்துவிடுவதே சாலச்சிறந்தது, ஏனெனில் எந்த விதத்திலும் இல்லற வாழ்க்கையை அது சிறப்பாக அமைத்துத்தாராது, தம்பதியர் இருவரின் இல்லற வாழ்க்கையை குறுகிய காலத்தில் பிரிவு, விவாகரத்து என்ற நிலைக்கு எடுத்துசென்றுவிடும், நட்ச்சத்திர பொருத்தம் 10க்கு 10 அமையலாம், செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம் எனும் ( உண்மைக்கு புறம்பான  ) பொருத்தங்கள் அமைந்து இருக்கலாம், சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமை பெறவில்லை எனில் தாம்பத்திய வாழ்க்கை நிச்சயம் சிறப்பாக அமையாது என்பதை கருத்தில் கொள்வது நல்லது.

திருமண பொருத்தம் காணும் பொழுது நட்ச்சத்திர பொருத்தம் காண்பதை தவிர்த்து  சுய ஜாதக பாவக வலிமையை கருத்தில் கொண்டு பொருத்தம் காண்பதே சிறப்பான இல்லற வாழ்க்கையை அமைத்து தரும், கீழ்கண்ட இரண்டு உதாரண ஜாதகங்கள் பாவக வழியிலான பொருத்தம் உண்டா என்பதை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !

பெண் ஜாதகம் :
 

லக்கினம் : துலாம் 
ராசி : துலாம் 
நட்ஷத்திரம் : ஸ்வாதி 2ம் பாதம்

ஆண் ஜாதகம் :


லக்கினம் : விருச்சிகம் 
ராசி : கும்பம் 
நட்ஷத்திரம் : அவிட்டம் 4ம் பாதம் 

மேற்கண்ட இரண்டு ஜாதகங்களுக்கு திருமண பொருத்தம் 3 விஷயங்களை வைத்து நிர்ணயம் செய்யலாம்.

1) ஜாதகத்தில் இருவருக்கும் இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கக்கூடிய 2,5,7,8,12ம் பாவகங்களின் வலிமை நிலை.

2) ஜாதகத்தில் இருவருக்கும் தற்போழுது நடைபெறும், எதிர்வரும் 
திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பலாபலன்கள்.

3) தற்போழுது நடைபெறும் எதிர்வரும், திசாபுத்திகள் தாம்பத்திய வாழ்க்கையில் சுபயோகங்களை நல்குமா ? என்ற விஷயங்களில் தெளிவு பெற்ற பிறகே திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பது சகல நலன்களையும் வாரி வழங்கும், மேற்கண்ட ஜாதகங்களை இந்த ஆய்வு எடுத்துக்கொள்வோம் .

ஜாதகியின் அமைப்பு :

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம், 8ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  இரண்டாம் வீடாக அமைவது ஜாதகிக்கு குடும்ப வாழ்க்கையில் கடுமையான சிக்கல்களை தரும் அம்சத்தை காட்டுகிறது, சுய ஜாதகத்தில் 2ம் வீடும் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாம் வீடும் கடுமையாக பாதிக்கப்படுவது ஜாதகியின் இல்லற வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தரும், மேலும் ஜாதகிக்கு திருமண வாழ்க்கையில் தாமதத்தை தரும்.

5ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின்  வாழ்க்கையில் பூர்வீகம் சார்ந்த ஜீவனத்தில் இன்னல்களையும், சமயோசித அறிவுத்திறன் அற்ற நிலையையும் தரும், குறிப்பாக குலதெய்வ வழியில் காரிய தடைகளையும், குழந்தை பாக்கியத்தில் கடும் சிக்கல்களையும் தரும், யாருடைய உதவியையும் பெற இயலாத சூழ்நிலையை உருவாக்கும்.

7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகி வாழ்க்கை துணையுடன் நல்ல தாம்பத்தியத்தை பெறுவார் என்பதுடன், கணவருடன் இணைபிரியா நிலையை தரும், ஜாதகியின் கணவர் மிகவும் நல்லவர் என்பதை உறுதிப்படுத்தும்.

12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த மனஉளைச்சல், உடல் நலம் சார்ந்த தொந்தரவுகள், அனைவராலும் தொல்லை, விபத்து வீண் செலவுகள், தாம்பத்திய வாழ்க்கையில் நிம்மதியின்மை, குழப்பம் மற்றும் சந்தேக எண்ணத்தை அதிகரிக்கும்.

நடைபெறும் குரு திசை ஜாதகிக்கு 1,3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும், 6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மைகளையும், 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான யோக பலாபலன்களையும் வாரி வழங்குகிறது, குரு திசை ஜாதகிக்கு 11ம் பாவக வழியில் இன்னல்களையும், 7,9ம் பாவக வழியில் சுபயோகங்களையும் தருவது கவனிக்கத்தக்கது.

எதிர்வரும் சனி திசை ஜாதகிக்கு 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் விரைய ஸ்தான பலனையே தருவது ஜாதகிக்கு நன்மையை தரும் அமைப்பல்ல, ஏனெனில் அயன சயன ஸ்தானம் வலிமை இழந்து சனி திசை 12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகிக்கு கணவன் மனைவி இடையிலான அந்தரங்க வாழ்க்கையில் இன்னல்களை ஏற்படுத்தும், சந்தேகம் அதிகரிக்கும் என்பது கவனிக்க தக்கது, எனவே ஜாதகிக்கு வாழ்க்கை துணையாக வரும் அன்பரின் ஜாதகத்தில் நடைபெறும் எதிர் வரும் திசை புத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது அவசியமாகிறது.

ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை 7ம் பாவக வழியில் நன்மையை தந்த போதிலும், எதிர்வரும் சனி திசை ஜாதகிக்கு கடுமையான இன்னல்களை தரும் என்பதால், ஜாதகிக்கு மிக பொருத்தமான வாழ்க்கை துணையை தேடி தருவது அவசியமாகிறது.


ஜாதகரின் அமைப்பு :

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 2,5ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான விஷயமாகும், ஜாதகர் 2ம் பாவக வழியில் இருந்து நல்ல குடும்ப வாழ்க்கையையும், கைநிறைவான வருமானம் மற்றும் இனிமையான பேச்சு திறனையும் கொண்டவர், 5ம் பாவக வழியில் இருந்து நல்ல புத்திர பாக்கியம் கொண்டவர் , தெய்வீக அனுக்கிரகமும் உண்டு, இறுதி நேரத்தில் ஜாதகரின் துன்பங்கள் மறையும், நல்ல சமயோசித புத்திசாலித்தனத்தை கொண்டவர், 7ம் வீடு  பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் தடை தாமதத்தையும், பொருத்தமற்ற வாழ்க்கை துணையையும் தேர்வு செய்யும் நிலைக்கு ஆளாக்கும், மேலும் ஜாதகரின் லக்கினமும் பாதிக்கப்படுவது ஸ்திர தன்மையற்ற முடிவுகளால், எதிர்பாலின சேர்க்கை மூலம் இன்னல்களை அனுபவிக்கும் நிலையை தரும், இதனால் ஜாதகருக்கு நீங்க இயலாத அவப்பெயர் ஏற்பட்ட அதிக வாய்ப்பு உள்ளது, நல்ல நண்பர்கள் சேர்க்கை இல்லை, வெளிவட்டார பழக்க வழக்கமும் சிறப்பில்லை என்ற  சூழ்நிலையை உருவாக்கும், தாம்பத்திய வாழ்க்கையில் மிகுதியான இன்னல்களை ஜாதகர் எதிர்கொள்ளவேண்டிவரும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு பூர்ண ஆயுளை தரும், இருப்பினும் சில திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, தனது வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் எதிர்பாலின சேர்க்கை மூலம் அளவில்லா பொருளாதார செலவினங்களை ஜாதகர் எதிகொள்ளும் நிலையை தரும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, ஏமாற்றமும், சிக்கல்களும் ஜாதகருக்கு அதிக அளவில் தேடிவரும், விபத்து அதன் வழியிலான மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

12ம் வீடு சத்துரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் தோல்வி மற்றும் ஏமாற்றங்கள் சாதகமான பலனை தந்துவிடும், இருப்பினும், வருமுன் காக்கும் வல்லமை இராது முன்யோசனை அற்ற வாழ்க்கை முறை  கடுமையான இன்னல்களை தரும், அனைவரையும் வெறுக்கும் நிலைக்கு ஆளாக்கும், குற்றம் கண்டுபிடிக்கும் குணம் ஜாதகரின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும், தாம்பத்திய வாழ்க்கையில் நெறிமுறையில்லா தன்மையை தரும், இதனால் கடுமையான உடல் நல பாதிப்பை ஜாதகர் எதிர்கொள்ளவேண்டி வரும், திருப்தி இல்லா வாழ்க்கை ஜாதகரின் தாம்பத்திய வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும்.

நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சத்ரு ஸ்தான பலனை ஏற்று நடத்துவது தனம் சார்ந்த நன்மைகளை வழங்கிய போதிலும், உடல் நலம் சார்ந்த தொந்தரவுகள் அதிகரிக்கும், குறிப்பாக, ஜாதகர் வயிறு சார்ந்த உபாதைகளை அதிக அளவில் எதிர்கொள்ளும் நிலையை தரும், மருத்துவ சிகிச்சை ஜாதகருக்கு அடிக்கடி தேவைப்படும்.

அடுத்து வரும் சனி திசையும் ஜாதகருக்கு 6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சத்ரு ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு உகந்த நன்மைகளை தரும் அமைப்பல்ல என்பதால் சனி திசை ஜாதகருக்கு சாதகமான பலாபலன்களை தர வாய்ப்பில்லை.

மேற்கண்ட இரண்டு ஜாதகத்திற்கும் ஏக திசை நடப்பு என்று சொல்வார்கள், ஆனால் இருவருக்கும் நடைபெறும் குரு திசையும் சரி, எதிர் வர இருக்கும் சனி திசையும் சரி வலிமை அற்ற பாவக பலனையே ஏற்று நடத்துகிறது என்பதால் நிச்ச்யம் இன்னல்களையே தரும், ஒருவேளை இருவருக்கு நடைபெறும் குரு,சனி திசைகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் நிச்சயம் சுபயோக பலாபலன்களே நடைமுறைக்கு வரும் என்பதை இந்த இடத்தில் " ஜோதிடதீபம் " குறிப்பிட்ட விரும்புகிறது, தம்பதியர்  இருவருக்கும் ஏக திசை நடைமுறையில்  இருந்தாலும், நடைபெறும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது நன்மைகளையே தரும், மேற்கண்ட ஜாதகத்தில் அந்த அமைப்பு இல்லை என்பது ஓர் துரதிர்ஷ்டமே.

களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற ஜாதகத்தை வாழ்க்கை துணையாக ஏற்பது ஜாதகிக்கு கடுமையான இன்னல்களை வாழ்க்கை துணை வழியில் இருந்து ஏற்படுத்தும் மேலும் ஜாதகியின் குடும்ப ஸ்தானமும், அயன சயன ஸ்தானமும் வலிமை அற்ற இருப்பதாலும், எதிர் வரும் சனி திசை விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவதாலும், மேற்கண்ட வரனின் ஜாதகத்தை தவிர்த்துவிடுவதே ஜாதகிக்கு நல்லது, மேலும் வரனின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், நடைபெறும் எதிர்வரும் திசைகளான குரு மற்றும் சனி சத்ரு ஸ்தான  பலனை ஏற்று நடத்துவது ஜாதகிக்கு இல்லற வாழ்க்கையில் இன்பத்தை தராமல், கடுமையான இன்னல்களை தரும் என்பதால், புத்திசாலித்தனமாக மேற்கண்ட வரனின் ஜாதகத்தை தவிர்த்துவிட்டு, தமக்கு உகந்த 2,5,7,8,12ம் பாவகங்கள் வலிமை பெற்று, நடைமுறை மற்றும் எதிர்வரும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் வரனின் ஜாதகத்தை தேர்வு செய்து நலம் பெறுவது அவசியமாகிறது.

குறிப்பு :

இல்லற வாழ்க்கையை இனிமையாக்குவது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே, நட்ச்சத்திர பொருத்தம் என்பது சுய ஜாதகம் அற்றவர்களுக்கு பெயரின் முதல் எழுத்தை கொண்டு திருமணம் செய்ய கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால ஜோதிட முறை, நவீன காலத்தில் சுய ஜாதகம் உள்ள பொழுது ( பிறந்த தேதி, நேரம், இடம் அடிப்படையாக கொண்ட ) சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டே திருமண பொருத்தம் காண்பது புத்திசாலித்தனம் ஆகும், சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைவது தாம்பத்திய வாழ்க்கையை 100% விகிதம் வெற்றிகரமாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை, வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக