புதன், 15 நவம்பர், 2017

ஏழரை சனி என்ன செய்யும் ? ஜென்ம சனியாக ஜென்ம ராசியில் சஞ்சாரம் கடுமையான பாதிப்பை தருமா ?

  
 
 ஏழரை சனிக்கு பயப்படாதவர்களே இல்லை என்று சொல்லிவிடலாம், குறிப்பாக சந்திரன் நின்ற ராசிக்கு முன்பின் ராசிகளிலும் சந்திரன் நின்ற ராசியிலும் சனிபகவான் சஞ்சரிக்கும் காலங்களை ஏழரை சனி என்று வர்ணிக்கின்றனர், இந்த ஏழரை சனி காலத்தில் சம்பந்தப்பட்ட ஜாதகர் படும் இன்னல்களுக்கு ஓர் அளவு இருக்காது என்றும், துன்பத்தை மட்டுமே சனிபகவான் பலனாக வாரி வழங்குவார் என்றும் கூறுவது உண்டு, குறிப்பாக ஓர் ஜாதகத்தில் ஏழரை சனி நடைபெறும் ( ஏழரை வருட ) காலங்களில் ஏற்படும் இன்னல்கள் அனைத்திற்கும் காரணகர்த்தாவாக சனிபகவானை காணும் அன்பர்கள், அவர் இன்னல்களை மட்டுமே தருவார் என்ற கற்பனை எண்ணத்தை அனைவரிடமும் விதைத்து இருக்கின்றனர் என்பதே உண்மை, அடிப்படையில் நவகிரகங்கள் தனிப்பட்ட ஆளுமையின் கீழ் ஓர் ஜாதகருக்கு நன்மை தீமை பலாபலன்களை வழங்க வல்லமை அற்றவர்கள் என்பதை உணர்ந்தவர்களுக்கு " ஏழரை சனி " என்பதே ஓர் பொய்யான கூற்று என்பதை தெளிவாக விளக்கம் தரமுடியும், ஏனெனில் சுய ஜாதகம் என்பது லக்கினம் முதல் 12பாவகங்களின் வலிமையின் அடிப்படையில் இயங்குவது, அதாவது பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகிய குறிப்புகளை கொண்டு சுய ஜாதகம் நிர்ணயம் செய்யப்படுகிறது , ஓரிரு நிமிடங்களில் சுய ஜாதகம் என்பது பல மாற்றங்களை சந்திக்கும் நிலையில் சந்திரனை அடிப்படையாக கொண்ட ஏழரை சனி தரும் பலன் என்பது கற்பனையானது என்று விளக்கம் தரவேண்டிய அவசியமில்லை என்று " ஜோதிடதீபம் " கருதுகிறது, கீழ்கண்ட ஜாதகத்தை உதாரணமாக கொண்டு கோட்சார சனிபகவான் தரும் பலாபலன்களை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மிதுனம் 
ராசி : தனுசு 
நட்ஷத்திரம் : பூராடம் 3ம் பாதம் 

 ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் ராகு திசை ( 05/04/2002 முதல் 05/04/2020 வரை ) 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த வலிமையான யோக பலாபலன்களை பூர்வபுண்ணிய ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது என்பது ஜாதகருக்கு சுபயோகங்களை தரும்  அமைப்பாகும், குறிப்பாக ஜாதகர் 5ம் பாவக வழியில் இருந்து கலைத்துறையில் வெற்றி, கற்ற கல்வி வழியிலான யோக பலன்கள், சமயோசித புத்திசாலித்தனம், குலதெய்வ அனுக்கிரகம், தெய்வீக அனுபவம், வாதத்திறன் கொண்டு அனைத்தையும் தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் யோகம், நிறைவான செல்வசேர்க்கை, நல்ல யோகம் மிக்க குழந்தைகளை பெரும் யோகம், அவர்கள் வழியிலான சுயோக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி சந்தோசம், காதல் வெற்றி, சாஸ்திர ஞானம், கணித தேர்ச்சி , திட்டமிட்டு செயல்படும் தன்மை, சீரான முன்னேற்றம், தர்மசிந்தனை, அனைவருக்கும் உதவும் குணம் என்ற வகையில் சிறப்புகளை ராகு திசை முழு வீச்சில் சுபயோக பலாபலன்களை பூர்வபுண்ணிய ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது.

ராகு திசையில் தற்போழுது நடைமுறையில் உள்ள சந்திரன் புத்தி ஜாதகருக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது ஜாதகர் மாத்ரு ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களை அனுபவிக்கும் தன்மையை தருகின்றது, புதிய மண் மனை வண்டி வாகன யோகம் உண்டாகும், ஜாதகரின் சுகபோக வாழ்க்கையின் தன்மை அதிகரிக்கும், தெய்வ அனுக்கிரகம் மூலம் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும், கல்வியில் வெற்றி, உறவுகள் வழியிலான ஒத்துழைப்பு என்றவகையில் சிறப்புக்களை தரும், ஜாதகரின் சுக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சிம்மராசியில் 1 பாகையில் ஆரம்பித்தது கன்னி ராசியில்  முழுவதும் வியாபித்து நிற்பது ஜாதகருக்கு தனது அறிவு சார்ந்த விஷயங்களிலும், தனம் சார்ந்த விஷயங்களிலும் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும், மேலும் குறுகிய கால லாபங்களை ஜாதகர் பெறுவதற்கு உண்டான வாய்ப்புக்களை தரும் என்பது கவனிக்கத்தக்கது .

ஆக ஜாதகருக்கு நடைபெறும் ராகு திசை 5ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், ராகு திசையில் தற்போழுது நடைமுறையில் உள்ள சந்திரன்  புத்தி 4ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும் வாரி வழங்குவது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் நன்மையான பலாபலன்கள் ஆகும், இதில் தற்போழுது தனுசு ராசிக்கு ஏழரை சனி என்றும் அதனால் ஜாதகர் இன்னல்களை சந்திப்பார் என்பது முற்றிலும் கற்பனை என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை, தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் ஜாதகரின் நான்காம் பாவகத்தை தனது 10ம் பார்வையாக வசீகரிப்பதும், 4ம் பாவகம் தனது வர்க்க கிரகமான புதபகவானின் வீடான கன்னியில் அமைவதும் ஜாதகருக்கு சுபயோக பலன்களையே தரும், சனி பகவான் சஞ்சாரம் செய்யும் 7ம் பாவக பலனை ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசையும், சந்திரன் புத்தியும் ஏற்று நடத்தவில்லை என்பதால் சந்திரன் நின்ற ராசிக்குள் சஞ்சாரம் செய்யும் ( ஏழரை சனி ) சனி பகவான் யாதொரு நன்மை தீமையை தரவில்லை என்பதே முற்றிலும் உண்மை, கிரகங்களின் சஞ்சாரம் என்பது தற்போழுது நடைமுறையில் உள்ள திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்புடன் எந்த விதத்திலாவது சம்பந்தம் பெற்றால் மட்டுமே நன்மை தீமை பலன்களை நடைமுறைப்படுத்திடும், தற்போழுது நடைமுறையில் உள்ள திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்புடன் எந்த விதத்திலும் சம்பந்தம் பெறவில்லை எனில் கோட்சர கிரகத்தால் யாதொரு பலாபலனும் நடைமுறைக்கு வாராது, சந்திரன் நின்ற ராசிக்கு கோட்சார பலன் காண்பதெல்லாம் கற்பனை கட்டுக்கதையாகவே அமையும் என்பதை கருத்தில் கொள்வது நலம், அடிப்படையில் சந்திரன் நின்ற ராசிக்கு பலாபலன்கள் காண்பதென்பது சுய ஜாதக  வலிமை மற்றும் அது தரும் பலாபலனுக்கு சற்றும் பொருந்தாதது என்பதை நினைவில் கொள்வது அவசியமாகிறது.

மேற்கண்ட ஜாதகருக்கு ஏழரை சனி என்னும் விஷயமே தவறான பலாபலன்களை கூறுவதற்கு வழிவகுத்துவிடும், ஏனெனில் சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு லக்கினம் முதல் 12 பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பதுடன், நடைபெறும் நவக்கிரத்தின் திசாபுத்திகள் அனைத்தும் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவதால், ஜாதாருக்கு ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி என அனைத்து சனிகளும் சகல நிலைகளில் இருந்தும் நன்மையான பலன்களையே தரும் என்பது கவனிக்கத்தக்கது.

எனவே சுய ஜாதக பலாபலன்களை நிர்ணயம் செய்வது சுய ஜாதக வலிமையே அன்றி, சந்திரன் நின்ற ராசிக்கு கோட்சார கிரகங்கள் தரும் ராசி பலன்கள் அல்ல என்பதை கருத்தில் கொள்வது நல்லது, குறிப்பாக ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, குரு பலம், ராசிக்கு குரு சஞ்சாரம் செய்யும் நிலை இவையெல்லாம், சுய ஜாதக வலிமை தெரியாமல் அது தரும் பலாபலன் பற்றிய அறியாமல் உளறும் உளறல்களே என்பதை அனைவரும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டி " ஜோதிடதீபம் " வைக்கும் வேண்டுகோள் ஆகும்.

குறிப்பு :

சுய ஜாதக வலிமை நிலையை தெளிவாக உணர்ந்து, பாவக வலிமையின் தன்மையை கருத்தில் கொண்டு எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக திட்டமிட்டு முன்னேற்றம் காண்பதே புத்திசாலித்தனம், ஜோதிடரீதியாக உள்ள மூடநம்பிக்கைகளை பலாபலன்கள் என்று கருதி வாழ்க்கையில் நமக்கு வரும் நல்ல வாய்ப்புகளை உதறித்தள்ளுவது என்பது முற்றிலும் தவறான வழிமுறையாகும், நல்ல ஜோதிடம் தங்களின் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றங்களை நிச்சயம் வாரி வழங்கும், இதில் மாற்று கருத்து என்பதே இல்லை "வாழ்த்துக்கள்"

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக