சனி, 25 நவம்பர், 2017

லக்கினாதிபதி சூரியன் திசை, விரையாதிபதி சந்திரன் திசை தரும் பலன்கள் என்ன ?



கேள்வி :

 வணக்கம் எனது சுய ஜாதகத்தில் தற்போழுது சூரியன் திசை நடைமுறையில் உள்ளது, சூரியன் லக்கினாதிபதி என்பதால் எனக்கு நன்மையே செய்வார் என்றார்கள் ஆனால் இதுவரை எந்தவித நன்மையையும் சூரியன் திசை தரவில்லை, கடன் மட்டுமே அதிகரித்துள்ளது, எதிர்வரும் சந்திரன் திசை விரையாதிபதி திசை என்பதால், வீண் விரையமே ஏற்படும் என்கின்றனர், எதிர்காலத்தை நினைத்து மிகவும் கவலையாக உள்ளது, தயவு செய்து சந்திரன் திசை எனக்கு இன்னல்களை அதிகம் தருமா ? ஓரளவு நன்மையாவது செய்யுமா தெளிவுபடுத்த வேண்டுகிறேன், " நன்றி "

பதில் :

  பொதுவாக சுப ஸ்தானங்களுக்கு அதிபதியான கிரகங்கள் மற்றும் கிரகங்களின் திசாபுத்திகள் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுபயோக பலன்களை தரும் என்பதும், அசுப ஸ்தானங்களுக்கு அதிபதியான கிரகங்கள் மற்றும் கிரகங்களின் திசாபுத்திகள் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு அவயோக பலன்களை தரும் என்பதும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை பற்றிய யாதொரு தெளிவும் இன்றி, பொதுப்படையாக சொல்லப்படும் கருத்துக்களே, ஒருவரின் சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் தனிப்பட்ட முறையில் சுபயோக பலன்களையே, அவயோக பலன்களையே தனது திசாபுத்திகளில் ஏற்று நடத்தும் என்பது, சிறிதும் சுயஜாதக கணித அறிவு இல்லாமல் கற்பனையில் கூறப்படும் கருத்துக்களே, இதற்க்கு முக்கியத்துவம் தருவது என்பது நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நாமே தடைக்கற்களை உருவாக்கிக்கொள்வதற்கு இணையானது.

 மேலும் கால புருஷ தத்துவ அமைப்ப்பிற்கு நமது சுய ஜாதகத்தில் நவ கிரகங்கள் பெரும் வலிமை நிலையை ( ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நீசம் ) கருத்தில் கொண்டு, நமக்கு அவை நன்மை தீமை பலன்களை தரும் என்று கருதுவதும் சுய ஜாதக பாவக வலிமை பற்றிய கணித அறிவு இல்லாமல் கூறப்படும் தவறான கருத்துக்களே, சுய ஜாதக கணிதம் என்பது மூன்று விஷயங்களை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது அவையாவன :

1) ஓர் ஜாதகர் தனது பிறந்த குறிப்பை அடிப்படையாக கொண்டு ( பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ) பெறப்படும் சுய ஜாதகத்தில் லக்கினம் என்பதே முக்கியத்துவம் பெறுகிறது, சுய ஜாதகத்தை இயக்குவதில் லக்கினமே முதன்மை வகிக்கிறது, இந்த லக்கினத்தை மூலாதாராமாக கொண்டு மற்ற பதினோரு பாவகங்களும் வலிமை அல்லது வலிமை அற்ற தன்மையை பெறுகின்றது ( லக்கினம் உற்பட ) இதில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் நன்மை மற்றும் சுபயோக பலன்களையும், வலிமை அற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் தீமை மற்றும் அவயோக பலன்களை ஜாதகர் தனது வாழ்நாளில் அனுபவிக்கும் தன்மையை பெறுகிறார்.

2) ஓர் ஜாதகர் தனது பிறந்த குறிப்பை அடிப்படையாக கொண்டு ( பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ) பெறப்படும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் பலாபலன்களையே, சுய ஜாதகத்தில் நவகிரகங்களின் திசாபுத்திகள் சுவீகரித்து தனது திசை,புத்தி, அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் வழங்குகிறது, நவகிரகங்கள் தான் அமர்ந்த இடத்தின் பலனையே, பார்த்த இடத்தின் பலனையே தனது திசாபுத்திகளில் தரும் என்று கருதுவதும், தான் பெற்ற ஆதிபத்யத்தின் பலனை தனது திசாபுத்திகளில் தரும் என்று கருதுவதும் உண்மைக்கு புறம்பானது, சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை அல்லது புத்தி ஏற்று நடத்தும் பாவக வலிமை என்ன ? அது தரும் பலாபலன்கள் என்ன ? என்ற அடிப்படை விஷயம் அறியாமல் கற்பனையில் கூறப்படும் கருத்துக்களே என்றால் அது மிகையில்லை.

3) கோட்சார கிரகங்களின் பலன்கள் என்பது தற்போழுது பெரும்பாலும் சந்திரன் நின்ற இடத்தை ( ராசியை ) அடிப்படையாக கொண்டு பலன் கூறப்படுவதும் தவறான அணுகு முறையே, நமக்கு சுய ஜாதகம் உள்ளது என்றால் கோட்சார பலாபலன்களை நமது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் சம்பந்த படுத்தி கோட்சார பலன்களை அறிந்துகொள்வதே சரியானது, இதுவே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு துல்லியமான பலாபலன்களை கூறுவதற்கு ஏதுவானதாக அமையும், மேற்கூறிய விஷயங்களை, கேள்விகள் வினவிய அன்பரின் சுய ஜாதகத்துடன் பரீட்சித்து பார்த்து ( உதாரண ஜாதகமாக கொண்டு ) தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : சிம்மம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : மகம் 2ம் பாதம்

சூரியன் லக்கினாதிபதி, லக்கினாதிபதி திசை ஏன் நன்மையை தரவில்லை ?

பொதுவாக லக்கினாதிபதி என்ற முறையில் ஓர் ஜாதகருக்கு, லக்கினாதிபதி திசை நன்மையை தரும் என்பது தவறான கருத்து, லக்கினாதிபதி திசை என்றாலும் சரி, யோகாதிபதி திசை என்றாலும் சரி நமது ஜாதகத்தில் எந்த பாவக  பலனை ஏற்று நடத்துகிறது என்பதை பொறுத்தே, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுபயோக பலன்களோ, அவயோக பலன்களோ நடைமுறைக்கு வரும், லக்கினாதிபதி என்ற ஓர் தகுதியை வைத்து, அவரது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் நன்மையை மட்டுமே வழங்கும் என்பது தவறான கருத்து, மேற்கண்ட ஜாதகத்தில் தற்போழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை ஜாதகருக்கு லக்கினாதிபதி திசை என்றாலும், அவரது ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 2,6,8,12ம் வீடுகளின் பலனை தனது திசையில் ஏற்றுநடத்துவதால் ஜாதகருக்கு லக்கினாதிபதி திசை நன்மைகளை தரவில்லை, சூரியன் திசை ஜாதகருக்கு ( 20/04/2012 முதல் 20/04/2018 வரை ) சுய ஜாதகத்தில் 2,6,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் விரைய ஸ்தான பலனை வழங்கிக்கொண்டு இருப்பது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து குடும்பத்தில் இன்னல்கள், வருமான  பாதிப்பு, வரும் வருமானம் மற்றும் தனம் விரையமாகும் தன்மை, வாக்கு வன்மை அற்ற நிலை என்றவகையில் இன்னல்களையும், 6ம் பாவக வழியில் இருந்து உடல் தொந்தரவுகள், எதிரி தொல்லை, கடன் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலை, வீண் அவப்பெயர், எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் இன்னல்கள் என்றவகையிலும், 8ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை வழியிலான வீண் செலவுகள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் வீண் விரையம், மற்றவர்களை நம்பி தரும் பணம் மற்றும் பொருட்கள் வழியில் இருந்து வரும் திடீர் இழப்புகள் என்ற வகையில் இன்னல்களை தரும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் மன நிம்மதி கேள்விக்குறியாக மாறும், நிம்மதியின்றி அதிக மனஉளைச்சலை ஜாதகர் எதிர்கொள்ளும் நிலையை தரும், முதலீடுகளில் எதிர்பாராத பேரிழப்புகளை தரும், இதன் தாக்கம் ஜாதகரின் மனநிம்மதியை சீர்குலைக்கும், சரியான முடிவுகளை மேற்கொள்ள இயலாமல் போராட்ட வாழ்க்கையை ஜாதகர் எதிர்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகவேண்டிய சூழ்நிலையை தரும், ஜாதகர் லக்கினாதிபதி திசை நன்மையை தரும் என்ற ஆலோசனையின் பெயரில் செய்த முதலீடுகள் அனைத்தும் வீண் விரையம் என்ற நிலையை அடைந்ததற்கு அடிப்படை காரணமே, சுய ஜாதகத்தில் சூரியன் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்தியது  என்று தெரியாமல் வழங்கிய தவறான ஜாதக ஆலோசனையே என்றால் அது மிகையில்லை, நடைபெறும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தியிருந்தால் ஜாதகருக்கும் இது போன்ற தவறான ஜோதிட  ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருக்காது, சிறந்த ஜோதிடர் கிடைத்திருப்பர், ஜாதகருக்கும் சரியான ஆலோசனை கிட்டியிருக்கும், விதியின்  பயனை வெல்ல ஜாதகரின் குல தெய்வமும், பித்ருக்களின் ஆசியையும் பெற தவறிவிட்டார் என்பதுடன் உதாசீனம் செய்தார் என்பது வருந்தத்தக்க விஷயமாகும், மேலும் ஜாதகரின் விரைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாகவும், சர நீர் ராசியாகவும் அமைவது ஜாதகரின் மனநிலையை வெகுவாக படுத்தியெடுத்துவிட்டது என்று சொல்லி தெரியவேண்டியதில்லை,

விரையாதிபதி சந்திரன் திசை விரையத்தை தரும், வீழ்ந்து கிடக்கும் ஜாதகரை விழிப்புணர்வுடன் வெற்றிகொள்ள செய்யுமா ?

 எதிர்வரும் விரையாதிபதி சந்திரன் திசை தரும் பலன் என்ன? என்பதை காணுமுன் கிராமங்களில் உள்ள பெரியோர்கள் ஓர் " செலவேந்தரம் " ஒன்று சொல்வதுண்டு அதாவது " கப்பல் வியாபாரத்தில் விட்ட காசை, கட்டில் கயிறு திரித்து பெற முடியாது " என்று சொல்வதுண்டு இதற்க்கு அர்த்தம் நாம் எங்கு விட்டோமோ அங்கு இருந்துதான் அதை பெற முடியும் என்பதாக அமையும், எனவே ஜாதகர் லக்கினாதிபதி திசையில் வெகு விரயங்களை சந்தித்து விட்டார், ஆனால் விரைய ஸ்தான அதிபதியான சந்திரன் திசையோ ஜாதகருக்கு வலிமை பெற்ற  3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவக பலனை ஏற்று நடத்தி, ஜாதகருக்கு அபரிவிதாமான யோக வாழ்க்கையை வாரி வழங்க தயார் நிலையில் உள்ளது என்பது ஜாதகருக்கு தற்போழுது " ஜோதிடதீபம் " வழங்கும் சிறப்பான நல்ல செய்தியாகும், மேலும் சந்திரன் திசை முழுவதும் வலிமை பெற்ற வீரிய ஸ்தான பலன்கள் நடைபெறுவது ஜாதகரின் வெற்றி வாய்ப்புகளை தன்னிறைவாக வாரி வழங்கும், ஜாதகரின் வீரிய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாகவும், சர காற்று ராசியாகவும் அமைவது  வெளிநாடுகளில் இருந்து வரும் சரளமான பொருளாதார முன்னேற்றத்தை குறிப்பதுடன், ஜாதகர் இவையனைத்தையும் தனது அறிவு சார்ந்த முயற்சிகளில் இருந்து பரிபூர்ணமாக பெறுவார் என்பதை தெளிவுபடுத்துகிறது, ஜாதகரின் சமயோசித அறிவு புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் சகல விதங்களில் இருந்து தன்னிறைவான பொருளாதார வளர்ச்சியை வாரி வழங்கும், ஜாதகரின் அறிவின் வீச்சு மிகவும் பிரமாண்டமானதாகவும், ஜாதகரின் அறிவு சார்ந்த கண்டுபிடிப்புகள் உலக மக்களின் அவசிய தேவையை நிறைவு செய்வதாகவும் அமையும் என்பதை நினைத்து " ஜோதிடதீபம் " வியப்படைகிறது.

3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மிகுந்த செல்வசெழிப்பு, எதிரிகளை வெல்லுதல், நல்ல மனநிலை, சிறந்த சிந்தனை ஆற்றல், சத்தியத்தை மதித்தது நடப்பது, கல்வி கேள்விகளில் வெற்றி, மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை, புதிய சிந்தனை மற்றும் புதிய  வாய்ப்புகள், ஏஜென்ஜி துறை வழியிலான அபரிவித வளர்ச்சி என்ற எமது  ஆசான் அருள்வேல் அய்யாவின் வாக்கிற்க்கு இணங்க, மேற்கண்ட சிம்ம லக்கின ஜாதகர் விரைய ஸ்தான அதிபதியான "சந்திரன்" திசையில் சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ணமாக பெறுவார் என்பதை உறுதிபட தெரிவித்து, மேற்கண்ட ஜாதகருக்கு எதிர்வரும் விரைய ஸ்தான அதிபதி சந்திரன் திசை விரையத்தை தாராது என்ற மனஉறுதியை வழங்குவதுடன், சந்திரன் திசைக்கு பிறகு வரும் செவ்வாய் திசையும் 4,10ம் வீடுகள் வழியில் இருந்து  சுபயோக பலன்களையும், செவ்வாய் திசைக்கு பிறகு வரும் ராகு திசை  5ம் வீடு வழியில் இருந்து சகல சௌபாக்கியத்துடன் கூடிய சுபயோக பலன்களையும் வாரி வழங்கும் என்ற திடமான ஜாதக உண்மையை கூற கடமைப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் வரும் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனையே தருவதால் ஜாதகருக்கு " வானமே எல்லை " என்பதை அறிவுறுத்துவதில் மகிழ்ச்சியும் மிதமிஞ்சிய இறை அருளின் கருணையை நினைத்து உவகை கொள்கிறது, எல்லாம் இறைஅருள் " வாழ்த்துக்கள் " அன்பரே !

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக